30 ஆண்டுகளாக ஒருதலை காதல் ; காதலிக்க மறுத்த குடும்ப பெண்ணுக்கு சம்பவம் செய்த காதலன்
காதலிக்க மறுத்த பெண்ணை கடந்த 30 ஆண்டுகளாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவரைக் கைதுசெய்துள்ள சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது.
கடந்த 30 வருடங்களுக்கு முன் ஆணொருவர் தனது இளமைக் காலத்தில் பெண்ணொருவரை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.
ஒருதலை காதல்
அவரது காதலை அந்த பெண்ணிடம் வெளிப்படுத்திய போதிலும் குறித்த பெண் அதனை ஏற்காமல் நிராகரித்துள்ளார். மேலும், வேறொரு ஆணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த ஆணும் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனிடையே அந்த பெண் திருமணம் ஆன ஆறே மாதத்தில் கணவரைப் பிரிந்து தனியாக வாழத் தொடங்கியுள்ளார்.
இதனால் அவரை சந்திப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்லும் குறித்த ஆண், தன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி வந்துள்ளார்.
தொடர்ந்து பத்து வருடம் தனிமையில் வாழ்ந்து வந்த அந்த பெண் தொந்தரவு தாங்க முடியாமல் கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த ஆண் 2015 ஆம் ஆண்டு குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் குறித்த பெண் தலை மற்றும் கைகளில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் குறித்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
10 வருடங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த மாதம் அந்த பெண்ணின் சாட்சி விசாரணை நடைபெற இருந்த நிலையில் குறித்த ஆண் மீண்டும் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியதுடன் அரிவாளால் வெட்டியுள்ளார்.
வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை கொலை செய்ய முயன்றது உள்ளிட்ட 6-பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தற்போது அந்த நபரைத் தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காதலிக்க மறுத்த பெண்ணை 30 ஆண்டுகளாகத் தொல்லை செய்து வந்தது மட்டுமல்லாமல் இரு முறை கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.