பல்கலை மாணவன் மரணம்; கல்வி அமைச்சின் அதிரடி
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் பகிடிவதை காரணமாக ஏற்பட்டதாக தெரியவந்தால், அதற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுவார்கள் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரின் திடீர் மரணம் தொடர்பாக இன்று (1) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்தமை குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்ததும், பல்கலைக்கழக நிர்வாகமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவமானமே தற்கொலைக்கு காரணம்
தற்கொலை செய்து கொண்ட நபர் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பிறகு, அவர் 28 ஆம் திகதி கம்பளை, இஹலகமவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
பின்னர், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை தனது வீட்டின் பின்புறம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பல்கலைக்கழக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவருக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானமே அவரது தற்கொலைக்கு வழிவகுத்ததாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் தனது மகன் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக சரித்தின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.