நாட்டை விட்டு 50 ரஷ்ய அதிகாரிகளை அதிரடியாக வெளியேற்றிய அமெரிக்கா!
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் ஐ.நா. தலைமையகத்தில் பணியாற்றி வரும் ரஷ்ய தூதரக அதிகாரிகள் பலர் அமெரிக்காவுக்கு எதிராக உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டி அவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) நிர்வாகம் உத்தரவிட்டது.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த முடிவுவை மறுபரிசீலனை செய்யும்படி அமெரிக்காவை ரஷ்யா கேட்டுக்கொண்டது.
இருப்பினும், அதை ஏற்க மறுத்த அமெரிக்க அரசாங்கம், குற்றச்சாட்டுக்கு உள்ளான ரஷ்ய தூதரக அதிகாரிகள் அனைவரும் மார்ச் 7ஆம் திகதிக்குள் தங்களின் குடும்பத்தினரோடு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் பணியாற்றி வந்த ரஷ்ய தூதரக அதிகாரிகள் 50 பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் செய்தது.
அதன்படி நேற்றையதினம் 50 ரஷ்ய தூதர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 2 பஸ்கள் மூலம் நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் அங்கிருந்து ரஷ்ய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தனி விமானத்தில் அவர்கள் அனைவரும் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவுக்கு புறப்பட்டனர்.
உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஒரே நாளில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 50 பேர், குடும்பத்தினரோடு அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.