இலங்கையை மீண்டும் வலியுறுத்தும் ஐ.நா!
ஜனநாயக சமூகத்தை ஸ்தாபிப்பதில் ஊடகவியலாளர்களினதும், ஊடக செயற்பாட்டாளர்களினதும் பாதுகாப்பு முக்கிய பங்கினை வகிக்கிறது.
கருத்து வெளியிடுவதற்கான சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த திங்களன்று ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் இல்லத்தின் மீது இனந்தெரியாத நபர்களால் கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பொலிஸாரினால் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக செயற்பாட்டாளர்கள் ஜனநாயக சமூகத்தை உறுதி செய்வதில் ஒரு பிரதான பங்கினை வகிக்கின்றனர். மேலும் கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை உறுதிப்படுத்த அவர்களின் பாதுகாப்பு இன்றியமையாதது.
விமர்சனக் குரல்களை முடக்குவதானது, பொது விவாதம், சுதந்திரம் மற்றும் அனைவரின் மனித உரிமைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.' என்று குறிப்பிட்டுள்ளார்.