வவுனியாவில் பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்ற வீடொன்று எரிப்பு
வவுனியாவில் அடையாளம் தெரியாத தரப்பினர் வீடொன்றின் மீது தீ வைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
வவுனியா - தோணிக்கல் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் பலியானதுடன் 9 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்ற வீடொன்றே இவ்வாறு தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதி
சம்பவத்தில் 21 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் காயமடைந்தவர்களில் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட 3 சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 4 பெண்களும் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முகத்தை மறைத்துக் கொண்டு அங்கு சென்ற அடையாளம் தெரியாத தரப்பினரால் வீட்டுக்கு தீ வைக்கும் சி.சி.டி.வி காணொளி காட்சிகள் கிடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர் வீட்டை எரித்ததோடு அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இதில் இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.