மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு சீல்; அதிரடி காட்டிய அதிகாரிகள்
மட்டக்களப்பில் பிரபல ஹோட்டல் ஒன்றை இரு தினங்களுக்கு மூடி சீல் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சுதர்சனி உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு நகரில் உள்ள குறித்த உணவு விற்பனை நிலையத்தின் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சோதனை நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிப்புரையின் பேரில் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ஹோட்டலை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது மனித பாவனைக்கு உதவாத பெருமளவிலான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன .
இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்தல், மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளுக்கமைய குறித்த ஹோட்டல் மீது வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு ஹோட்டலை சீல் வைத்து மூடுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ சுதர்ஷினி உத்தரவிட்டுள்ளதுடன் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த ஹோட்டல் பொது சுகாதார பரிசோதகர்களினால் திங்கட்கிழமை(8) மாலை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.
அதேவேளை ஹோட்டல் உரிமையாளர் ஹோட்டலை தூய்மைப்படுத்தி மனித நுகர்வுக்கு பொருத்தமான முறையில் உணவு தயாரிக்கும் இடமாக மாற்றி அமைத்தால் மாத்திரம் மீண்டும் ஹோட்டலை திறப்பதற்கான அனுமதியை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழங்குவார்கள் என கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்
மேலும் ஹோட்டல் உரிமையாளர் மீதான வழக்கு எதிர் வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.