கைநழுவிப்போன கடைசி வாய்ப்பு: இலங்கைக்கு ஐ.நா நெருக்கடி!
ஐக்கிய நாடு மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை இந்த முறை மிக கடுமையானதாக இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
யாழிற்கு வருகை தந்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருடனான (Hanaa Singer) இன்றைய சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய சந்திப்புக்கு குறித்து தொடர்ந்து அவர் தெரிவித்தது“அரசியல் விடயங்கள், உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் பேசியுள்ளோம். 13ஆம் திருத்தத்தை ஏற்றுக் கொள்கின்ற தமிழ்க் கட்சிகளின் நடவடிக்கை சம்பந்தமாகவும் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக நேர்மாறாக நடைபெறுகின்ற விடயம் தொடர்பிலும் பேசியுள்ளோம்.
இதேவேளை, இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும்போது, இலங்கை கடற்படை அதனைத் தடுக்காமல் அசண்டையீனமாக செயற்படுவது தொடர்பாகவும், தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்ட பெண்களுக்கு வரும் மோசமான பழி வாங்கல் சம்பந்தமாகவும் தெரிவித்துள்ளோம்.
மேலும், தென்னிலங்கைச் சூழல் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள், உரிமை மீறல் சார்ந்த விடயங்கள் தொடர்பாகவும் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளோம். அமைதியாக அனைத்தையும் உள்வாங்கிய அம்மையாரிடம் கடந்த அறிக்கை சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தோம்.
இந்நிலையில், அரசாங்கம் புதிதாக ஆட்சிக்கு வந்ததால் அவர்களுக்கு சந்தர்ப்பம் ஒன்று வழங்க வேண்டும் எனக் கூறிய ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், இம்முறை அறிக்கை கடுமையானதாக இருக்கும் எனவும் கூறியிருந்ததாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.