ரஷ்யாவின் பிரமாண்டமான போர்க்கப்பலை தரைமட்டமாக்கிய உக்ரைன்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிந்துள்ளது. இந்த தருணத்தில் ரஷ்யாவின் பிரமாண்ட போர்க்கப்பலை உக்ரைன் படைகள் அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஒரு மாத காலமாகியுள்ளது. ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் என அறிவித்துவிட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பிரசவ மருத்துவமனைகள் என தாக்குதல் எல்லையை ரஷ்யா விரிவுபடுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே ஒரு மாத கால போரில் உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் 15 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக நேட்டோ மதிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் இருந்து வருகிற பெர்டியன்ஸ் நகர் அருகே ரஷியாவின் பிரமாண்டமான போர்க்கப்பலான ஓர்ஸ்க்கை, உக்ரைன் படைகள் நேற்று வியாழக்கிழமை (24-03-2022) அழித்துள்ளன.
இதுதொடர்பான படங்கள் முகநூல் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. இந்த நகரம் மரியுபோல் நகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. உக்ரைன் படைகளால் அழிக்கப்பட்டுள்ள போர்க்கப்பல் 20 டாங்குகள், 45 கவச வாகனங்கள், 400 துருப்புகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.
குறித்த கப்பல் அழிக்கப்பட்டதை உக்ரைன் துணை ராணுவ மந்திரி ஹன்னாமல்யார் உறுதிப்படுத்தினார்.