உக்ரைன் - ரஷ்யா போர்; இந்தியாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்
போரின் காரணமாக சுமார் 1 லட்சம் ஐ.டி வேலைகள் இந்தியாவிற்கு வர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
ரஷியா கடந்த ஒரு வாரமாக உக்ரைன் மீது போர் புரிந்துவரும் நிலையில், உக்ரைன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், போரினால் பல்வேறு பின்விளைவுகளை உக்ரைனும், பிற நாடுகளும் சந்திக்க உள்ளன.
அதன் ஒருபகுதியாக உக்ரைன், ரஷியா, பெலாரஸ் மற்றும் அவற்றின் அண்டை நாடுகளில் சுமார் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் ஐ.டி பணியிடங்கள் வேறு நாடுகளுக்கு மாற்றப்படவேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது.
ரஷியா மற்றும் பெலாரஸ் மீது அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக ஐ.டி துறை கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி உக்ரைனில் டிஜிட்டல் துறையில் சுமார் 30 ஆயிரம் மற்றும் பன்னாட்டு வர்த்தக சேவை துறையில் 20 ஆயிரம் ஐ.டி ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பெலாரஸ் மற்றும் ரஷியாவில் டிஜிட்டல் மற்றும் வர்த்தக துறைகளில் சுமார் 40 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
இந்த பணியிடங்களில் 70 சதவீத வேலைகள் இந்தியாவிற்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக எவரஸ்ட் குழுமம் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர் மேலும் உக்கிரமடைந்தால், விலைவாசி உயர்வின் காரணமாக ஐ.டி. சேவைகளுக்காக கட்டணங்கள் அதிகரக்கக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.