இரண்டாவது மாதத்தில் உக்ரைன்- ரஷ்ய போர்; கானலான புடினின் எண்ணம்; மயானமாகும் உக்ரைன் நகரங்கள்!
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரானது இன்றுடன் ஒரு மாதம் முடிவடையும் நிலையில், இரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறது.
உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்ற ஆவேசத்தில் ரஷ்ய படைகள் நடத்தி வரும் தீவிர தாக்குதலில், உக்ரைனின் பல முக்கிய நகரங்கள் நாசமாகி, மயானங்களாக காட்சி அளிக்கின்றன. நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது கடந்த மாதம் 24ம் திகதி ரஷ்யா போர் தொடுத்தது.

உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. முதலில் உக்ரைனின் இராணுவ தளங்களின் மீது மட்டுமே தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யா கூறியபோதும், நாட்கள் செல்ல செல்ல அரசு அலுவலகங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் பொதுமக்கள் செல்லும் பொது இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவருகின்றது.
உக்ரைன் இராணுவத்தின் கடும் பதிலடி காரணமாக, தரை வழியாக பெரும் முன்னேற்றம் அடைய முடியாமல் ரஷ்ய படை திணறி வருவதனால், வான்வழி தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் சரமாரி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழக்கின்றனர்.

கட்டிடங்கள் சல்லடையாகி காட்சி அளிக்கின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், 2வது பெரிய நகரமான கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற ரஷ்ய படைகள் போராடி வருகின்றன. ஆனால், உக்ரைன் படைகளின் பதிலடியால் ரஷ்யாவின் இந்த முயற்சி பலிக்கவில்லை.
இதனால், ரஷ்ய படைகள் அதிநவீன, ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் சீறிப்பாய்ந்து இலக்குகளை தகர்க்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை அதிகளவில் வீசி தாக்குதல் நடத்தி வருகிறமை உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை ரஷ்ய படைகள் கைப்பற்றிய கார்கிவை உக்ரைன் படைகள் மீண்டும் மீட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் ஒரு சில நாட்களில் போரை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என கருதிய ரஷ்ய அதிபர் புடினின் (Vladimir Putin) எண்ணம், ஒரு மாதமாகியும் ஈடேறவில்லை என்பதுடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், இன்று 2வது மாதத்தில் அடி எடுத்து வைக்கிறமை குறிபிடத்தக்கது.