ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு: உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்!
பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக உக்ரைனின் 4 நகரங்களில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 12-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, சுமி நகரில் 700-க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி போர் களத்தில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இதனால் அவர்கள் சுமி நகரில் இருந்து வெளியேற தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரைன் மற்றும் ரஷ்யா என இருதரப்பையும் இந்தியா கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய 4 நகரங்களிலும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா நேற்றைய தினம் அறிவித்தது.
அந்த நகரில் சிக்கியுள்ள பாதுகாப்பாக வெளியேறவும், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளுக்காகவும் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது.
முன்னதாக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மரியுபோல், வோல்னோவாகா நகரங்களில் ரஷியா தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறித்தபோதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு உக்ரைன்தான் காரணம் என ரஷ்யாவும், ரஷ்யாதான் காரணம் என உக்ரைனும் பரஸ்பரம் குற்றம் சாட்டின.
இந்த சூழலில்தான் 4 நகரங்களில் ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்திருக்கிறது. ஆனால் அந்த நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற தொடங்கியுள்ளனரா என்கிற தகவல்கள் கிடைக்கவில்லை.
இதேவேளை, “போர் நிறுத்தம் என்பதே கண்துடைப்பு. தற்காலிகமாக போரை நிறுத்துவதாக அறிவித்துவிட்டு, ரஷ்யா குண்டு வீசி தாக்குவதை தொடர்கிறது” என்று உக்ரைன் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில், தலைநகர் கீவை சுற்றியுள்ள பல நகரங்களில் ரஷ்ய துருப்புகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக இர்பின் நகரில் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.
இதில் குடியிருப்பு கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவையும் குறிவைக்கப்படுகின்றன. இதனால் ரஷ்ய தாக்குதல்களில் பொதுமக்களின் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பொதுமக்கள் 406 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.