நடுவானில் கழன்று விழுந்த விமான சக்கரம் ; பிரிட்டிஷ் ஏர்வேஸ் இல் திக் திக் நிமிடங்கள்!
பிரிட்டிஷ் ஏர்வேஸ் வானூர்தி ஒன்று லாஸ் வேகாஸில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில், அதன் சக்கரம் ஒன்று கழன்று விழுந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன.
திங்கட்கிழமை இரவு 9:10 மணியளவில் லாஸ் வேகாஸின் ஹாரி ரீட் சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட Airbus A 350-1000 ரக விமானத்திலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பாகத் தரையிறங்கிய விமானம்
விமானம் வானில் ஏறிக்கொண்டிருந்தபோது, அதன் தரையிறங்கும் தொகுதியிலிருந்து ஒரு சக்கரம் தனியாகக் கழன்று கீழே விழுவது காணொளியில் தெளிவாகத் தெரிகிறது.
சக்கரம் கழன்று விழுந்த போதிலும், வானூர்தி அட்லாண்டிக் கடலைக் கடந்து திட்டமிட்ட நேரத்திற்கு 27 நிமிடங்கள் முன்னதாகவே லண்டனில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. ஓடுபாதையில் விழுந்த சக்கரம் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் வானூர்தி நிலையத்திற்கோ அல்லது பயணிகளுக்கோ எந்தவித காயங்களோ, சேதங்களோ ஏற்படவில்லை என வானூர்தி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சக்கரம் கழன்று விழுந்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பாதுகாப்பே எமது முதன்மை நோக்கம் எனத் தெரிவித்துள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், இது தொடர்பான விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியுள்ளது.