விடுமுறையில் சுற்றுலா சென்ற இரு இளைஞர்கள் மாயம்
குருநாகல் தெதுரு ஓயாவில் இன்று (1) பிற்பகல் நீராடச் சென்ற ஐந்து பேர் நீரில் இழுத்துச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதோடு, அவர்களில் மூன்று பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
காணாமல் போன இருவரும் கண்டி பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் 20 மற்றும் 22 வயதுடைய இரு இளைஞர்கள் ஆவர்.
காப்பாற்றப்பட்ட மூவரும் இளம் யுவதிகள் எனவும், அதே பல்பொருள் அங்காடியில் பணிபுரிபவர்கள் எனவும் தெரியவருகிறது.
காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக பிரதேச மக்கள் படகுகளைப் பயன்படுத்தி நடவடிக்கையைத் தொடங்கிய போதிலும், பிற்பகல் வரை கண்டுபிடிக்கப்படவில்லை.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்பொருள் அங்காடியை மூடிவிட்ட அதன் உரிமையாளரும் ஊழியர்களும் இந்த சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
இவர்கள் முதலில் சிலாபம் கடற்கரைக்குச் சென்றதோடு, பின்னர் இந்தக் குழு தெதுரு ஓயாவிற்கு சென்றுள்ளது.
மேலும் அவர்கள் அங்கு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீராடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.