உதவி பொருட்களுடன் கியூபா சென்ற இரு கப்பல்கள் மாயம்; ஊழியர்களின் நிலை என்ன?
மெக்சிகோவிலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்றிக்கொண்டு கியூபா நோக்கிப் பயணித்த இரண்டு கப்பல்கள் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கப்பல்களுடனான அனைத்துத் தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கப்பலில் இருந்த ஊழியர்கள் தொடர்பிலும் எவ்வித தகவல்களும் இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திடீரென தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்துள்ளன
மாயமான இரண்டு கப்பல்களிலும் மொத்தம் 9 ஊழியர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரீபியன் கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்துள்ளன. கப்பல்கள் மாயமானதைத் தொடர்ந்து, மெக்சிகோ கடற்படை (Mexican Navy) கரீபியன் கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளது.
வானூர்திகள் மற்றும் ரோந்துப் படகுகள் மூலம் தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கடல் சீற்றம் அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கப்பல்களின் தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.