போலி மருத்துவர்கள் இருவருக்கு நேர்ந்த கதி
நீண்டகாலமாக மருத்துவர்கள் என தங்களை அடையாளம் காட்டி நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து மோசடியில் ஈடுபட்டு வந்த இருவர், குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத கால சிறைத்தண்டனை விதித்து, களுத்துறை மேலதிக நீதிவான் நுத்தினன் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பேருவளை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு தண்டப்பணம் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாமல் சட்டவிரோத தொழில்
அளுத்கம, தர்கா நகர் பகுதியில் சிகிச்சை நிலையங்களை நடத்திச் சென்ற இவர்கள், களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இலங்கை மருத்துவ பேரவையில் (SLMC) பதிவு செய்யப்படாமல் சட்டவிரோதமாக மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வந்தமை இதன்போது வெளிச்சத்துக்கு வந்தது.
களுத்துறை தேசிய சுகாதார விஞ்ஞான நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் (களச் சேவைகள்) சமூக மருத்துவ நிபுணர் சரித் ஹெட்டிஆரச்சி மற்றும் அளுத்கம சுகாதார மருத்துவ அதிகாரி சம்பத் நிரோஷன ஆகிய அதிகாரிகளுடன், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் இணைந்தே இந்தச் சோதனையை முன்னெடுத்திருந்தனர்.