சீன நாட்டவர் கொலையில் மேலும் இருவர் கைது
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சீன நாட்டவர்களை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சீகிரிய பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூலை 23 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சீன நாட்டவர் ஒருவர் கடத்தப்பட்டிருந்தார்.

ஒளிந்திருந்த சீன நாட்டவர்களும் கைது
பின்னர், அவரது சடலம் எஹெலியகொடை பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தப்பிச் சென்றிருந்த ஏனைய சந்தேகநபர்கள் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
அதன்படி, சந்தேக நபர்களான மூன்று சீன நாட்டவர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியையும் கோரியிருந்தனர்.
இவ்வாறான பின்னணியில், நேற்று (28) சீகிரிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஒளிந்திருந்த போதே இவ்விரு சீன நாட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.