கிண்ணியா விபத்தில் இருபிள்ளைகளையும் பறிகொடுத்த தாயின் கதறல்!
கிண்ணியாவில் இடம்பெற்ற படகு வித்தில் ஜீரணிக்க முடியாத சோக சம்பவத்தில் தன் இரண்டு குழந்தைகளையும் இழந்த தாய் ஒருவர், என் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்ட வல்ல நாயனுக்கு நன்றிகள் என கதறலுடன் கூறிய வார்த்தை இது.
படகு விபத்தில் உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய் மேலும் தெரிவிக்கையில்,
எனது இரு குழந்தைகளும் இணைபிரியாத தோழிகள். ஒரு கணப் பொழுதேனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மாட்டார்கள். பிரியாத இந்த தோழிகள் படகு பாதை விபத்திலும் பிரியாமலே மரணித்து விட்டார்கள்.
எனது மகள்களில் ஒருவர் உயிர்தப்பி இருந்தால் அடுத்த மகள் படாதபாடுபட்டிருப்பாள். இருவரையும் இழந்து தவிக்கும் வேதனையை விட ஒருவர் உயிர் தப்பினால் அந்த வேதனையை எங்களால் தாங்க முடியாது.
"இவர்கள் இருவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எப்பொழுதும் குதூகலித்துக் கொண்டு இருப்பார்கள். எனது மகிழ்ச்சியான இரு குழந்தைகள் சம்பவதினம் காலை 7 .15 க்கு மிக ஆவலுடன் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு பாதையில் ஏறினார்கள்.
நான் பாதை வரை சென்று அவர்களை வழியனுப்பி விட்டு திரும்பி வந்து விட்டேன். எனது கணவர் கல்முனை பஸ்ஸில் வேலை செய்கின்றார். நானும் வீட்டில் எனது அடுத்த குழந்தையை பராமரித்துக் கொண்டிருந்தேன். அதனால் அவர்களோடு சேர்ந்து போக என்னால் முடியவில்லை.
இழுவைப் பாதையை விடMotor பாதை வேகமானது என்று பாதுகாப்பு குறைந்த பாதையை தெரிவு செய்து கொண்டார்கள். மரணம் அவர்களை வா வா என்று அழைத்து சுவனம் செல்லுங்கள் என்று இறைவனின் விதி அழைத்துக் கொண்டதோ என அந்த தாய் கதறுகின்றார்.
பாதுகாப்பான பாதைதானே என்று நான் பாதியில் விட்டுவிட்டு வந்தேன். இறைவனின் விதி இப்படி நடந்துவிட்டது. நான்கு மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைக்கு செல்லப் போகிறோம்.
அதுவும் பாதையில் செல்லப் போகிறோம் என்று ஞாயிற்றுக்கிழமை குதூகலித்துக் கொண்டு அக்காவும் தங்கையும் மகிழ்ச்சி பிரவாகத்தில் இருந்தார்கள்.
"ஆசை ஆசையாக வளர்த்தோம். எனது கணவனின் தாயைத்தேடி இருவரும் கைகோர்த்துச்செல்வார்கள். அவ்வாறே சம்பவதினம் அதிகாலை கை கோர்த்து சென்ற என் குழந்தைகள் கைகோர்த்த மாதிரியே அவர்களின் ஜனாஸா வீடு வந்து சேர்ந்தது" என கதறி அழுதார் அந்த தாயார்.
அருகே உட்கார்ந்து அமைதியாய் சோகங்கள் ஆட்கொண்டு காட்சி தந்த தந்தை கூறினார் "இரண்டு நாட்களுக்கு முன் அப்பியாசக் கொப்பிகள் வாங்கித்தாருங்கள் தந்தையே என்று செல்லமாக கேட்டார்கள்" என விம்மியழுதார்.
முழு நாட்டையும் உலுக்கிய இது போன்றதொரு சம்பவம் மீண்டும் இடம்பெறாமல் இருக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.