ஐம்பொன் சிலையுடன் கைதான இருவர் ; வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்
தமிழகம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலையுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடி கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரி விஜய் அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திரேஸ்புரம், அண்ணா காலனியில் நேற்று (2) மாலை தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஐம்பொன் விஷ்ணு சிலை
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பழங்காலத்து ஐம்பொன் விஷ்ணு சிலையை கைப்பற்றி கடத்தலில் ஈடுபட இருந்த தூத்துக்குடி மாவட்டம், ஏரல், கொற்கை, பிள்ளைமார் தெருவைச் சேர்ந்த 52 வயதான நபரையும், ஏரல் தாலுகா, கொட்டாரக்குறிச்சி, பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்த 35 வயதான நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் கைதான இருவரும் மேலதிக விசாரணைக்காக தூத்துக்குடி வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும் என தெரியவருகிறது.
மேலும் அவர்களிடம் விசாரித்தபோது, ஐம்பொன் சிலைகள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.