மன்னார் துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது!
மன்னார் - அடம்பன், முள்ளிக்கண்டல் பகுதியில் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிலங்குளம் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 55 வயதுடைய குறித்த இருவரும் நேற்று (20.02.2024) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரட்டை கொலை சம்பவம் கடந்த (24.08.2023) ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டு இருந்தது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஜேசுதாசன் அருந்தவராஜா மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சளவக்கை கிராமத்தை சேர்ந்த 56 வயதான கணபதி காளிமுத்து ஆகியோரே உயிரிழந்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.