புலிகளின் தங்கத்தை இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சி! வெளியான பரபரப்பு பிண்ணனி
புலிகளினால் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சி மேற்கொண்டதாக, இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை, இரகசியாமாக தோண்டி எடுப்பதற்கு அமைச்சுக்களின் செலயாளர்கள் இருவர் முயற்சித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய கடந்த 25ஆம் திகதி தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், மாவீரர் தின நிகழ்வுகளினால் இந்த நடவடிக்கை நாளைய தினம் (02) வரையில் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் (Douglas Devananda) செயலாளர்கள் இருவரே, இந்த தங்கத்தை முன்கூட்டியே இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்துள்ளனர்.

மேலும், இதற்காக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வீட்டிற்கே சென்று உதவி கோரிய போதிலும் அதற்கு அவர் இனங்க மறுத்துள்ளார்.
இதேவேளை, தோண்டி எடுப்பதற்காக நீதிமன்றில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 25ஆம் திகதிக்கு முன்னதாக இரகசியமாக தங்கத்தை தோண்டி எடுக்க உதவுமாறும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிடம் கோரியுள்ளனர். குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த பகுதிக்கு கடுமையான பொலிஸ் இராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சுதந்திரபுரம் பகுதியில் நாளை (02) மாலை வியாழக்கிழமை நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப்பணிகள் இடம்பெறவுள்ளது. தற்போது, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பொது பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர், உடன் நடைமுறையாகும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.