திருமலையில் உடைந்து விழுந்த பெயர் பலகை! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவிகள்
திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியிலுள்ள சீனசட்டி உலோகத்திலான பெயர் பலகை ஒன்று 7 அடி உயரமான மரத்தூனிலிருந்து உடைந்து விழுந்துள்ளதாக அந்த பகுதியை சேர்ந்த திருமலை பிரணவன் என்ற நபர் இந்த தகவலை முகநூலில் பதிவிட்டிருந்தார்.
மேலும் இந்த சம்பவத்தின் போது அருகாகமலையில் நடந்து சென்ற இரு பாடசாலை மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளனர். இந்த பெயர் பலகை சுமார் 20 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் இடம்பெற்ற வேளை கனகம்மில் கட்டிடத் தொகுதியில் அமைந்திருந்த பொலிஸ் அதிகாரியிடமும், அப் பகுதி கிராமசேவகரிடமும் அந்த நபர் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் உடைந்து விழுந்த பெயர் பலகையை அந்த நபரின் கடை வளவில் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார்.
பின்னர் சம்பவ தினத்தன்றே நகரசபைக்கும் அந்த நபர் தகவலை தெரியபடுத்தியிருக்கிறார். ஆவன செய்வதாக கூறியவர்கள் ஒருவாரத்திற்கும் மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடையில் வேலைசெய்த ஊழியர் மற்றும் அரசடி சந்தி ஆட்டோ சாரதிகள் உதவியுடன் அதை எஞ்சிய துண்டுடன் ஒரு PVC பைப்புக்குள் இணைத்து அப்படியே அந்த இடத்தில் நட்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இன்று வரை அந்த பெயர் பலகை அப்படியே உள்ளதாகவும் இதை இனியாவது நகரசபை கவனத்தில் எடுத்து அதை சரியாக கொங்கீர் கம்பத்திலாவது பொருத்தி அதை உயரமாக்க வேண்டுமென அவர் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.