இந்தோ-பசுபிக் பிராந்தியம் தொடர்பில் முத்தரப்பு கலந்துரையாடல்!
இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் தூதுவர் மட்டத்தில் முத்தரப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதற்கான உறவுகளை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது குறித்து கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி, இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் முத்தரப்பு ஒத்துழைப்பின் தொடக்க அமர்வில் உரையாற்றும் போது “தெற்காசியா ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதில் முக்கிய பங்குதாரராக உள்ளது ”என தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்தியாவுடனான உறவுகள் இலங்கைக்கும் ஜப்பானுக்கு முக்கியமானது மேலும் இலங்கை மற்றும் இந்தியா இரண்டும் ஜப்பானின் அத்தியாவசிய பங்காளிகள்” எனவும் தெரிவித்துள்ளார். “அத்துடன் அனைத்து இருதரப்பு கடன் வழங்குநர்களின் பங்களிப்புடன் வெளிப்படையான மற்றும் நியாயமான கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது “என்றும் சுசுகி சுட்டிக்காட்டியுள்ளார்.
“தொடர்ந்து இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதியுதவி பாராட்டுக்குரியது என்றும், அந்த ஆதரவு கடனை மறுசீரமைக்க உதவியது ”என்றும் சுசுகி இதன்போது தெரிவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொறொகொட, “பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு இந்தியாவின் ஆதரவு பெரும் பலமாக அமைந்துள்ளது ” என குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையில் முதலீடு செய்வதன் மூலம் இந்தியா மற்றும் ஜப்பானின் தனியார் துறையினர் அதிக பங்களிப்பை வழங்குவதற்கு இதுவே சரியான நேரம் எனவும் மொரோகொட இதன்போது சுட்டிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.