'மீனகயா' ரயிலில் குடிநீர் பாட்டில் அதிக விலைக்கு விற்றவருக்கு ரூபா 100,000 அபராதம்
'மீனகயா' ரயிலின் சிற்றுண்டிச்சாலையில், குடிநீர் பாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த ஒரு விற்பனையாளருக்கு, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் நேற்று (28) ரூபா 100,000 அபராதம் விதித்தது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) தகவலின்படி, 1000 மில்லி குடிநீர் பாட்டில் ஒன்றிற்கான நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை ரூபா 100 என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

எனினும், குறித்த விற்பனையாளர் அப்பாட்டில்களை ரூபா 160-க்கு விற்பனை செய்து, கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பயணிகளிடம் ரூபா 60-ஐ மேலதிகமாக அறவிட்டுள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையைச் சேர்ந்த ஒரு விசாரணை அதிகாரி, சாதாரண வாடிக்கையாளர் போல வேடமிட்டு, அதிக விலைக்கு விற்கப்பட்ட குடிநீர் பாட்டிலை வாங்கிய பின்னரே, சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.