பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தைக்கு நடந்த துயரம்
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் பெற்றோருடன் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
நேற்று அதிகாலை மேற்படி குழந்தை பெற்றோருடன் கட்டிலில் நித்திரையில் இருந்துள்ளது. இதன்போது, குழந்தை திடீரெனக் கட்டிலில் இருந்து உருண்டு அருகில் இருந்த தரைப்பகுதியில் தவறி விழுந்துள்ளது.
இதில் அக்குழந்தையின் தலைப் பகுதியில் பலத்த அடிபட்டுக் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதுடன், குழந்தை உடனடியாக அவ்விடத்திலேயே மயக்கமடைந்துள்ளது.
குழந்தை மயக்கமடைந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அக்குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது என்று அங்கிருந்த கடமை நேர வைத்தியர்கள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோரின் கண் முன்னாலேயே இரண்டு வயதுக் குழந்தை இவ்வாறு உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.