இலங்கை பெண்கள் ஓமானுக்கு கடத்தல் விவகாரம்: மேலும் இருவர் சிக்கினர்
ஓமான் நாட்டிற்கு இலங்கைப் பெண்களை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைதானவர்களில் ஒருவர் பதுளையைச் சேர்ந்தவர் என்றும் அவர் கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (22-11-2022) சரணடைந்ததையடுத்து கைதுசெய்யப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மற்றைய சந்தேகநபர் குருணாகலில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தொழில் பெற்றுத்தருவதாக இலங்கைப் பெண்களை ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு அனுப்பி, அங்கு அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்து்டன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
அவர் துபாயிலிருந்து நாடுதிரும்பியிருந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, பிரதான சந்தேகநபரின் உள்ளூர் முகவர் எனக்கருதப்படும் சந்தேகநபர் ஒருவரும் அன்றைய தினம் மாலை கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், நேற்றைய தினம் இச்சம்பவம் தொடர்பில் பெண்ணொருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று சரணடைந்ததையடுத்து, நேற்று கைதுசெய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், விசாரணைகளின் பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்றைய தினம் மேலும் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, இந்த ஆட்கடத்தல் சம்பவம் தொடர்பில் இதுவரை 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.