தங்க பிஸ்கட்டுகளுடன் சிக்கிய வர்த்தகர்
தங்க பிஸ்கட்டுகளை சட்ட விரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (21) காலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான வர்த்தக2ர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனையில் சிக்கிய வர்த்தகர்
குறித்த நபர் டுபாயிலிருந்து SL-226 என்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இன்று காலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துக்கொண்டு அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்லும்போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அவரது பயணப்பையில் இந்த தங்க பிஸ்கட்டுகளை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.
பின்னர், இந்த பயணி மற்றும் அவர் சட்ட விரோதமாக கொண்டுவந்த தங்க பிஸ்கட்டுகள் அனைத்தும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கெட்டுக்களின் பெறுமதி சுமார் ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா என கூறப்படுகின்றது.