குடிவரவு - குடியகல்வு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் கைது
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் ஒருவர், போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றை தயாரிப்பதற்கு உதவி புரிந்த குற்றச்சாட்டின் கீழ், கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வரும் போலி கடவுச்சீட்டு தயாரிப்பு தொடர்பான வழக்கொன்றுக்கு அமைவாக, இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையிலிருந்து நாடு கடத்தப்பட்ட குற்றக் குழு உறுப்பினர்
அதன்படி, சென்னையிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் ஒருவரின் படத்துக்கு, வேறொரு நபரின் கைரேகை உள்ளிட்ட உயிரியல் தரவுகளை உட்படுத்தி விண்ணப்பப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மோசடியாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை முறையான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் பொறுப்பேற்று, குறித்த பிரதி கட்டுப்பாட்டாளர் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்குவதற்கு உடந்தையாக இருந்து உதவியதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தில் வைத்து இன்றைய தினம் இந்த பிரதி கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என கூறப்படுகின்றது. மேலும் சம்பவம் குறித்து கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.