இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் எடுக்கப்பட்ட தீர்மானம்!
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை (21-11-2022) இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கபட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற வருடாந்த அறிக்கைகளும் செயலாற்றுகை அறிக்கைகளும் அவற்றுக்கான மென் பிரதிகள் மூலம் தற்போது நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படுவதோடு அந்த அறிக்கைகளின் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வன் பிரதிகளை மட்டும் தேவையைக் கருத்திற் கொண்டு உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காகவும் சபா மண்டபத்தில் மற்றும் நூலகத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
தாள்களுக்கான அதிக செலவு காரணமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற அனைத்து அறிக்கைகளையும் மென் பிரதிகளாக (Soft Copy) சமர்ப்பிப்பதற்கு கடந்த 2022.06.02 அன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரம், 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் மீதான குழுநிலை விவாதம் நடாத்தப்படுகின்ற காலப்பகுதியில் அந்தந்த அமைச்சுக்கள்/ நிறுவனங்களினால் நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் முன்னேற்ற அறிக்கைகளையும் மென் பிரதிகள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு 2022.09.29 ஆம் திகதி நடாத்தப்பட்ட நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
அவ்வறிக்கைகளின் சில வன் பிரதிகளை உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக சபா மண்டபத்தில் மற்றும் நூலகத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.