ஏகாதசி வழிபாட்டிற்கு இணையான புரட்டாசி பெளர்ணமி இன்று!
புரட்டாசி மாத பெளர்ணமியில் செய்யப்படும் வழிபாடு ஏகாதசி விரத வழிபாட்டிற்கு இணையான பலன்களையும் தரும் என சொல்லப்படுகிறது.
அந்தவகையில் வாழ்க்கையில் ஏற்றமும், புண்ணிய பலன்களும் தரக் கூடியது புரட்டாசி மாத பெளர்ணமி ஆகும்.
புரட்டாசி மாதப்பிறப்பு நாளுடன் பெளர்ணமி
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பவுர்ணமி திதி சிறப்புக்குரியது என்றாலும் , பெளர்ணமி வரும் மாதங்கள் மற்றும் கிழமைகளின் அடிப்படையில் அதன் சிறப்புகள் மட்டுமின்றி, வழிபாட்டு பலன்களும் மாறுபடும்.
பெளர்ணமியானது சிவன், விஷ்ணு இருவருக்குரிய உகந்த வழிபாட்டு நாளாகும். அதே போல் புரட்டாசி மாதமும் பெருமாள் மற்றும் அம்பிகை வழிபாட்டிற்கு உரியதாகும்.
புரட்டாசி மாத பெளர்ணமியில் பெருமாளையும், குலதெய்வங்களையும் மனதார வழிபட்டு வந்தால் மகத்தான பலன்களைப் பெற்று இன்புற்று வாழலாம்.
வீட்டில் பொன், பொருள் சேர....
ஒவ்வொரு மாதத்திலும் பவுர்ணமி, அமாவாசை இரண்டு நாட்களுமே சிறப்புக்குரிய நாட்கள் தான்.
இந்த நாட்களில் பிரபஞ்சத்தின் ஆற்றல் பல மடங்கு அதிகரித்து காணப்படும் என்பதாலேயே பவுர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய இரு நாட்களும் மிக முக்கியமான விரத நாட்களாக கருதப்படுகின்றன. வியாழக்கிழமை என்பது குரு பகவானுக்குரிய நாளாகும்.
குரு வழிபாட்டிற்கு மட்டுமின்றி, செல்வங்களை அள்ளித் தரும் குபேரனை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது.
வியாழக்கிழமையில் வரும் பவுர்ணமியில் சில குறிப்பிட்ட முறையில் வழிபாடு செய்வதால் குரு பகவானின் அருளும், குபேரனின் அருளும், சந்திர பகவானின் அருளும் நமக்கு கிடைக்கும்.
அதோடு வீட்டில் பொன், பொருட்கள் குறைவில்லாமல் சேர்ந்து கொண்டே இருக்கும். தங்கம் வாங்குவதற்கான யோகம் வருவதுடன், வீண் செலவுகள் குறையும்.
இந்த வழிபாட்டினை ஒவ்வொரு வியாழக்கிழமையும் செய்து வந்தால் குபேரனின் அருள் நமக்கு எப்போதும் இருக்கும். பவுர்ணமி அன்று நேர்மறை ஆற்றல்கள் அதிகம் இருக்கும்.
அந்த நாளில் நாம் வழிபடும் போது நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதுவும் செல்வ செழிப்பை தரும் குபேரரை வழிபடுவது மிகவும் சிறப்பு.
தயிர் வைத்து வழிபடுவது சிறப்பு
குபேரரை எந்த வடிவத்தில் வைத்து வழிபட்டாலும் அவர் ஒரே மாதிரியான பலனை தான் தருவார் குபேரருக்கு ஏற்ற நைவேத்தியம் தயிர்.
குபேரருக்கு தயிரை நைவேத்தியமாக படைத்து வழிபடும் போது கணக்கில்லாமல் பொன், பொருள் சேரும். குபேர வழிபாடு மட்டுமின்றி பொன், பொருள் சேர மகாலட்சுமியை வழிபடும் போதும் தயிர் வைத்து வழிபடுவது சிறப்பு.
தயிர் குபேரருக்கு விருப்பமானது என்பதுடன், வெள்ளை நிற பொருட்கள் அனைத்தும் சந்திர பகவானுக்குரியது என்பதால் அவருக்குரிய பவுர்ணமி அன்று தயிரை படைத்து வழிபடுவதால் சந்திரனின் அருளும் கிடைக்கும்.
இதனால் மன அமைதி, மன மகிழ்ச்சி, மனத்தெளிவு போன்றவை கிடைக்கும். அதே போல் பணக் கஷ்டம் தீர வேண்டும் என்பவர்கள் பவுர்ணமி தினத்தில் தயிர், தயிர் சாதம் போன்றவற்றை தானமாக வழங்கலாம்.
இப்படி செய்வதால் சந்திர தோஷம் உள்ளிட்டவைகள் நீங்குவதுடன், மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைத்து பணக்கஷ்டம் அனைத்தும் தீரும்.