வாழ்வின் இன்னல்கள் நீங்கி முக்தி கிடைக்கும் வைகுண்ட ஏகாதசி இன்று!
இன்று பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வைணவ தலங்களில் மிக முக்கியமான நிகழ்வான 'சொர்க்க வாசல்' எனப்படும் பரமபத வாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது.

சொர்க்க வாசல் திறப்பு
அந்தவகையில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 1:40 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா... கோவிந்தா..." என விண்ணை பிளக்கும் வகையில் முழக்கமிட்டு பரவசமடைந்தனர்.
இதேபோல், காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயில் மற்றும் பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலிலும் அதிகாலையிலேயே சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

மார்கழி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி நாளில் சொர்க்க வாசல் வழியாக இறைவனை தரிசித்தால், வாழ்வின் இன்னல்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இந்த நன்னாளில் விரதமிருந்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.