த.தே.கூட்டமைப்பினரை சந்தித்த முக்கிய நாட்டின் தூதர்!
யாழிற்கு இன்றையதினம் (26-10-2022) விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் பல்வேறு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அந்தவகையில் அமெரிக்க துணைத்தூதுவர் டக் சோனெக் யாழில் உள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானமும் கலந்துகொண்டனர்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, அரசியல் அமைப்பின் ஏற்பாடுகளை அமுல் செய்தல், அரசாங்கத்தின் காணி அபகரிப்பு, தமிழ் மக்களின் பொருளாதார மேம்பாடு, விவசாயம் மற்றும் கடற்தொழில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து எந்தத் தீர்வையும் வழங்காது என்பதை அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உணர்ந்து இவ்வாறான விடயங்களில் காத்திரமான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென கோரப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.