டித்வா சூறாவளி தாக்கம் ; கொழும்பு–கண்டி ரயில் பாதைகளுக்கு 340 பில்லியன் ரூபாய் சேதம்
‘டித்வா’ சூறாவளியால் கடுமையாக சேதமடைந்துள்ள கொழும்பு–கண்டி பிரதான தொடருந்து பாதையில், ரம்புக்கனை முதல் கண்டி வரையிலான தொடருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க சுமார் ஒரு வருட காலம் ஆகும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தொடருந்து பாதைகள் முழுமையாக சந்தித்துள்ள சேதத்தின் மதிப்பு சுமார் 340 பில்லியன் ரூபாய் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இது இறுதி மதிப்பீடு அல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார். பேராதனை கருப்புப் பாலம் கடுமையாக சேதமடையவில்லை என்றாலும், அதன் அடித்தளம் மற்றும் ரம்புக்கனை–கண்டி தொடருந்து பாதையின் பல பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக, பொறியாளர்களின் விரிவான தொழில்நுட்ப மதிப்பீடுகளுக்குப் பின்னரே மீளமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரமாக தொடருந்து பாதையை அமைத்து சேவைகளை இயக்குவது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, தேவையான கால அவகாசத்தை எடுத்துக் கொண்டு பாதை நிர்மாணம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதற்கிடையில், மலையக ரயில் பாதையில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள பாரிய நிலச்சரிவுகள் காரணமாக, கொட்டகலையிலிருந்து அம்பேவெல வரையிலான ரயில் பாதையை மீட்டெடுப்பது மிகவும் கடினமான பணியாக மாறியுள்ளது என ரயில்வே பராமரிப்பு பிரிவின் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.