சுடுகாட்டில் மகளின் திருமணத்தை நடத்திய தந்தை; காரணத்தால் பலரும் நெகிழ்ச்சி!
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுடுகாட்டில் வினோத திருமணம் ஒன்று அரங்கேறி உள்ளது.
கோவில்களில் நடந்த திருமணங்கள் மண்டபங்களுக்கு மாறிய நிலையில், சமீப காலமாக பலர் நூதன முறையில் திருமண விழாக்களை வடிவமைக்க விரும்புகிறார்கள்.
சிலர் கடலில் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் சுடிகாட்டில் திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் இந்த தம்பதிகள்.
பிறந்தது வளர்ந்தது சுடுகாட்டில்தான்
அகமதுநகர் மாவட்டம் ரகாதா பகுதியை சேர்ந்தவர் கங்காதர் கெய்க்வாட். இவர் 20 ஆண்டுகளாக ரகாதாவில் உள்ள சுடுகாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் மயூரி திருமணம் தான் அவர் வேலை செய்து வரும் சுடுகாட்டிலேயே நடந்து உள்ளது.
திருமணத்தில் குடும்பத்தினர், ஊர் மக்கள், சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர். மகளின் திருமணத்தை சுடுகாட்டில் நடத்தியது குறித்து கங்காதர் கெய்க்வாட் கூறுகையில்,
"நான் 20 ஆண்டுகளாக இங்கு தான் உள்ளேன். எனது மகள் இங்கு தான் வளர்ந்தாள். இங்கு இருந்து தான் படித்தாள். எங்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்தது இந்த சுடுகாடு தான். எனவே தான் இங்கேயே திருமணத்தை நடத்தினோம்" என்றார்.
இதற்கிடையே அகமதுநகரில் சுடுகாட்டில் நடந்த திருமணம் மூடப்பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.