துளசி மாலை அணியும் போது என்னவெல்லாம் செய்யக் கூடாது தெரியுமா?
துளசி மாலை என்பது மிகவும் புனிதமான ஒன்று. பெருமாளுக்கு உகந்தது இந்த துளசி. துளசிக்கு இணையானது துளசி மாலை என்கிறார்கள். இப்படிப்பட்ட தெய்வ கடாட்சம் பொருந்திய துளசி மாலையை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
துளசி மாலையை கழுத்தில் அணிந்தாலும் சரி, ஜபம் செய்ய பயன்படுத்துவதானாலும் சரி அதற்கென சில விதிமுறைகள் உள்ளன.
முதலில் துளசி மாலையை வாங்கி வந்ததும் அதை மஞ்சள் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும்.
பின்னர் கங்கை ஜலம் இருந்தாலோ அல்லது சுத்தமான நீர், கோமியம் ஆகியவற்றால் ஒரு முறை கழுவ வேண்டும். பிறகு அதை சுத்தமான துணியால் துடைத்து பூஜை அறையில் மகாவிஷ்ணுவின் படத்திற்கு அருகே வைத்து வழிபட வேண்டும்
துளசி மாலை அணிபவர்கள் அசைவம், வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது. அது போல் மது, புகை, புகையிலை போன்ற போதை வஸ்துக்களையும் பயன்படுத்தவே கூடாது. துளசி மாலை, மிகவும் புனிதமானது, தெய்வீக சக்தி படைத்த மாலை என்பதால் அதை அணிபவர்கள் மனதாலும் உடலாலும் தூய்மையாக இருத்தல் வேண்டும்.
ஒருவர் அணியும் துளசி மாலையை மற்றவர்கள் அணியவே கூடாது. துளசி மாலை அணிபவர்கள் உடலுறவு கொள்ள கூடாது.
இந்த மாலை உங்களை தீய சக்திகளில் இருந்து காக்கும். இந்த துளசி மாலையை தியானம் செய்யும் போதும் பிரார்த்தனை செய்யும் போதும் மந்திரங்களை உச்சரிக்கும் போதும் அணியலாம்.
கழுத்தில் அணியும் போது அதன் மீது மரியாதை இருக்க வேண்டும். ஏதோ அழகு அணிகலனாக அதை கருதவே கூடாது.
இந்த மாலையை நீங்கள் பயன்படுத்தக் கூடாது என்ற சம்பவங்களில் அணிய முடியாத நிலை இருந்தால் அதை உடனே சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளவும்.குளிக்கும் போது, நீச்சல் பழகும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் அணியவே கூடாது.