கண்களில் மிளகாய் பொடி தூவி முச்சக்கரவண்டி கொள்ளை
கொழும்பு கொட்டாவை நகரத்தில் சாரதியின் கண்களில் மிளகாய் பொடியை தூவி முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மொரகஹதென்ன பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பு கொட்டாவை நகரத்தில் பெண்ணொருவரும் இரண்டு ஆண்களும் கைக்குழந்தையுடன் தலகல பிரதேசத்திற்கு செல்வதற்காக முச்சக்கரவண்டி ஒன்றில் வாடகைக்கு ஏறியுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பின்னர் முச்சக்கரவண்டியில் இருந்த ஆண்கள் இருவரும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சாரதியின் கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளனர்.
சாரதி வலியில் துடித்துக்கொண்டிருக்கும் போது சந்தேக நபர்கள் மூவரும் சாரதியிடம் இருந்த கையடக்கத் தொலைபேசி, 11 ஆயிரம் ரூபா பணம் மற்றும் முச்சக்கரவண்டியை கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சாரதி இது தொடர்பில் மொரகஹதென்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் மொரகஹதென்ன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.