தென்னிலங்கையில் ஹெரோயினுடன் மேலும் மூவர் கைது
காலி சீனிகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று பேர் கைதாகியுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட நடவடிக்கைப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 கிலோகிராம் 416 கிராம் ஹெரோயினை பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன், சந்தேகநபர்களிடமிருந்து 10,811,500 ரூபாய் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் அண்மையில் தங்காலைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் தொடர்புடையது என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.