அமெரிக்காவில் உறைபனியில் சிக்கி இந்தியர்கள் மூவர் பலி
அமெரிக்காவில் உறைபனி ஏரியில் விழுந்து இந்தியாவை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்கா, கனடாவில் தற்போது கடும் குளிர் ஏற்பட்டுள்ளது.
அதிலும் அமெரிக்காவில் ‘பாம்ப்’ புயலால் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். அவர்களில் சிலர் காரிலேயே உறைந்து உயிரை விட்டுள்ளனர். டெக்சாஸ், சிகாகோ, நியூயார்க், ஓஹியோ ஆகிய மாகாணங்களில் விமான போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பாலபர்ரகு பகுதியை சேர்ந்த நாராயணா (40), ஹரிதா (36) தம்பதியினர் தங்களது 2 மகள்களுடன் அங்குள்ள அரிசோனா மாகாணத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
உட்ஸ் கேன்யன் ஏரி
தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால், கடந்த திங்கட்கிழமை நாராயணா தனது மனைவிமற்றும் பூஜிதா (12), ஹர்ஷிதா (10) ஆகிய இரு மகள்களுடன் கோகோனினோ பகுதியில் உறைந்த நிலையில் இருக்கும் உட்ஸ் கேன்யன் ஏரியை பார்வையிட காரில் சென்றனர்.
அவர்களுடன் கோகுல்(47) என்பவரும் உடன் சென்றிருந்தார். ஏரியின் உறைபனியில் ஏறி நின்று அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்ட பின் நாராயணா, கோகல் மற்றும் ஹரிதா ஆகிய மூன்று பேரும் உறைந்த ஏரியில் நடந்து சென்றனர்.
பூஜிதா, ஹர்ஷிதா ஆகியோர் காரில் இருந்தனர். இந்நிலையில் உறைந்த ஏரியில் ஐஸ்கட்டி திடீரென உடைந்ததால், 3 பேரும் ஏரியில் மூழ்கினர். காரில் இருந்த மகள்களின் கண் முன் அவர்கள் ஏரியில் மூழ்கினர்.
சம்பவத்தை கேள்விபட்டதும் உட்ஸ் கேன்யன் ஏரிக்கு மீட்பு குழுவினர் சென்று ஹரிதாவை மட்டும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.நீரில் மூழ்கிய நாராயணா மற்றும் கோகுலை மீட்பு குழுவினர் சடலங்களாக நேற்று முன்தினம் மீட்டுள்ளனர்.