மன்னார் காற்றாலை மின் உற்பத்தி கோபுரம் இடிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதம்
மன்னார் கந்தகுளிய பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்து இன்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தனியார் மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான காற்றாலை கோபுரத்தின் ஒரு பகுதி திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்விடத்தில் குறித்த நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து காற்றாலை கோபுரங்கள் இருப்பதாகவும், அவற்றில் ஒன்றின் ஒரு பகுதி இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தக் காற்றாலை விசையாழிகளில் ஒன்று 270 அடிக்கு மேல் உயரமும், அங்கு நிறுவப்பட்ட தளம் சுமார் 129 அடி நீளம் கொண்டது.
காற்றாலை கோபுரம் இடிந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றிலுமாக சேதமடைந்ததோடு, அருகில் அமைந்துள்ள இரண்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இருப்பினும், கோபுரம் இடிந்து விழுந்த நேரத்தில் வீடுகளில் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.