மன்னாரில் அதிரடி கைதான மூவர் ; அரங்கேறிய சட்டவிரோத செயல் அம்பலம்
மன்னார், சௌத்பார் பகுதியில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட ‘கஜபா’ நிறுவனத்தின் கடற்படையினர் நேற்று (28) முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட நடவடிக்கை
இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த படகொன்றை சோதனையிட்ட கடற்படையினர், வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 300 கிலோகிராம் மீன்களையும், ஒரு கடற்றொழில் படகையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 64 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள், கைப்பற்றப்பட்ட மீன்கள் மற்றும் கடற்றொழில் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.