கஜேந்திரகுமார் எம்பியை மிரட்டியவர் மைத்திரியின் ஆளா? அம்பலப்படுத்திய சிங்கள ஊடகவியலாளர்
யாழ்ப்பாணம் - மருதங்கேணியில் கஜேந்திரகுமார் எம்பியை அச்சுறுத்திய சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸ் அதிகாரி, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றத்துக்காக ஏற்கனவே பொலிஸ் அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
கஜேந்திரகுமார் எம்பியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிவில் உடையில் நின்றிருந்த பொலிஸ் அதிகாரி தொடர்பான தகவல்களை தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
துப்பாக்கியை வைத்து போராட்டம்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை பிஸ்ரலைக் காட்டி அச்சுறுத்தியதாகச் சொல்லப்படும் பொலிஸ் அதிகாரி, பொலிஸார் எடுத்த உள்ளக நடவடிக்கை ஒன்றுக்காக 2018 ஆம் ஆண்டு பொதுமக்கள் கூடும் பொது இடத்தில் தனது ரி–56 துப்பாக்கியை வைத்து போராட்டம் நடத்தியிருந்தார்.
அதோடு அவர் சுடப்போவதாகவும் எச்சரித்திருந்தார். இதற்காக அவர் பின்னர் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவி வகித்தபோது மேற்படி பொலிஸ் அதிகாரிக்கு மீள் நியமனம் வழங்கியதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் அவருக்கு இழப்பீடாக ஒரு மில்லியன் ரூபாவும் வழங்கியிருந்தார் என்றும் தென்னிலங்கை ஊடகவியலாளரான ரங்க சிறில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.