யானையை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள்!
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் வெளியேற்றப்படவுள்ளனர்.
அதன்படி உள்ளூராட்சி மன்றங்களில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 1,137 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய கட்சியின் செயற்குழு நேற்று தீர்மானித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் 341 மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் உறுப்புரிமையே இவ்வாறு இரத்து செய்யப்பட்டன.
வேறு கட்சிக்கு ஆதரவு
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த குறித்த உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு ஆதரவளித்துள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன், இவ்வருட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இவர்கள் ஏற்கனவே ஏனைய கட்சிகளின் ஊடாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்தே, உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 300 பேர் கொண்ட குழு மன்னிப்பு கேட்க அவகாசம் கேட்ட போதிலும், கட்சியின் செயற்குழு அதை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீக்க முடிவு செய்தது.
மேலும் உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகப்பூர்வ பதவிக்காலம் இன்னும் முடிவடையாத நிலையில், எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 1,137 புதிய உறுப்பினர்களை கட்சி நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.