கடும் எச்சரிக்கையால் பின்வாங்கிய ட்ரம்ப் ; தாக்குதலை நிறுத்த இது தான் காரணம் ; ஈரானின் தகவல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் "ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை" நடத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்த கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக நிராகரித்துள்ளது.
உலக சந்தையில் அதிகரித்து வரும் எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்கும், அமெரிக்க இராணுவத் திட்டங்களுக்குக் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்குமே ட்ரம்ப் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாக ஈரான் அரசாங்கத்துடன் இணைந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாக்குதல் இலக்குகள்
பிராந்திய பதற்றத்தைத் தணிப்பதற்காக சில நாடுகளினால் முன்வைக்கப்பட்ட சில "ஆலோசனைகள்" மாத்திரமே தற்போது உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி 'மெஹ்ர்' (Mehr) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
"இந்த யுத்தத்தைத் தொடங்கிய தரப்பினர் நாங்கள் அல்ல. எனவே, இந்த அனைத்து கோரிக்கைகளும் ஆலோசனைகளும் வொஷிங்டனை நோக்கியே முன்வைக்கப்பட வேண்டும்" என ஈரான் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள அந்த அதிகாரி, "மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்களது தாக்குதல் இலக்குகளில் அடங்கும் என்பதைத் தெரிந்துகொண்ட பின்னரே, அவர் (ட்ரம்ப்) தற்போது பின்வாங்கியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.