அவர்கள் என்னை கொன்று விடுவார்கள்; இரு பிள்ளைகளை இழந்த ஆப்கான் பெண்ணின் மனவேதனை
தலீபான்கள் மிகவும் கொடுமையானவர்கள் என்றும் அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் எனவும் ஆப்கான் பெண் ஒருவர் ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
ஆப்கான் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் 199௦ல் தலீபான்கள் நடத்திய ஆட்சியில் இருந்த Fariba Akemi என்ற 40 வயது பெண் தற்பொழுது அவர்கள் ஆப்கானை கைப்பற்றியுள்ள நிலைமை குறித்து 'THE INDEPENDENT' என்ற ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில்,
"தலீபான்கள் அமைப்பினர் திருந்தவே மாட்டார்கள் அவர்கள் கொடுமையானவர்கள். அவர்கள் தற்பொழுது அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் பொய்யே. அதனை நம்ப இயலாது. அவர்கள் என்னை கண்டால் கொன்று விடுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் ஆப்கானிஸ்தானில் உள்ள Herat மாகாணத்தில் தான் பிறந்தேன். எனக்கு 14 வயதாக இருந்த பொழுது எனது தந்தை நிதி நெருக்கடி காரணமாக என்னை விட 20 வயது மூத்தவரை திருமணம் செய்து வைத்தார். Herat நகரைப் பொறுத்தவரை வயது வித்தியாசம் ஒரு பெரிய விஷயமாக கருதப்படுவதில்லை. ஆனால் அவரைப் பற்றி முழுமையான விவரங்கள் அறியாமல் திருமணம் செய்து கொடுத்தனர்.
அவர் திருமணத்திற்கு பிறகு என்னை அடித்து துன்புறுத்தியதுடன் படிக்க விடாமல் தடுத்தார். இதற்கிடையில் எனக்கு நான்கு மகள்கள் பிறந்தனர். வேறு வழியில்லை என்று வாழ்ந்து கொண்டிருந்த போது கடன் சுமை காரணமாக எனது மூத்த மகளை என் கணவர் தலீபான்களுக்கு விற்பனை செய்ததோடுமட்டுமின்றி போதை பொருள் வியாபாரத்தையும் செய்து வந்தார். தொடர்ந்து எனது 12 வயது சிறிய மகளையும் விற்றார். இது குறித்து பொலிஸாரிடம் கூறினால் மீதியிருக்கும் இரண்டு மகள்களையும் கொன்று விடுவேன் என என்னை மிரட்டியதுடன் தொடர்ந்து என்னையும் தாக்கி வந்தார்.
இதற்கிடையில் எனது மற்ற இரு மகள்களையும் அவர் விற்க முடிவு செய்ததனால் நான் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அதனால் என் கணவர் Heratடை விட்டு தப்பி ஓடினார். இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டதில் எனது கணவர் தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
அதன் பின்னர் தலீபான்கள் என்னை தொடர்பு கொண்டு பேசியதுடன் அவர்கள் என் கணவர் வாங்கிய பணத்திற்காக என்னுடைய மூன்றாவது மகளையும் அனுப்புமாறு கேட்டனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அங்கிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் தலீபான்கள் மறுபடியும் எனக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து நான் உடனடியாக நாட்டை விட்டு எனது இரண்டு மகள்களுடன் வெளியேறினேன். இதன் காரணமாக எனக்கு அவர்கள் மரண தண்டனை விதித்தனர். இதன் பிறகு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக எனது குடும்பம், உறவினர்கள் என்று அனைவரையும் விட்டு விட்டு ஆப்கானில் இருந்து இந்தியாவிற்கு வந்தேன்.
மேலும் எனது இரண்டு மகள்கள் எப்படி உள்ளார்கள் அல்லது அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை என்றும் அப்பெண்மணி மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.
