ஆலயத்தில் தொடர் திருட்டு; பக்தர்கள் கவலை
மட்டக்களப்பு - திருக்கோவில் சங்குமண்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் தொடராக திருட்டுச் சம்பவங்களால் பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (07)அன்று நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரம், நீர் குழாய், பொங்கல் பானைகள், மண்வெட்டி போன்ற பொருட்கள் திருட்டு போயுள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸில் முறைப்பாடு
ஆலய பரிபாலன சபையின் செயலாளரும் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான வா.குணாளன் தெரிவிக்கையில்,
வரலாற்று பிரசித்தி சங்குமண்கண்டி கிராமத்தின் உள் வீதியில் அமைந்துள்ள காட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது காட்டுப் பகுதியில் இருக்கிற ஆலயமாகும்.
ஆலய மடத்தில் வைக்கப்பட்டிருந்த மண்வெட்டி போன்ற பொருட்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) அதிகாலை திருடப்பட்டுள்ளன.இது பற்றி திருக்கோவில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்.
இங்கிருந்த உண்டியல் கடந்த மாதம் திருடர்களால் தூக்கிச் செல்லப்பட்டிருந்து. பிரதேசத்தில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.