மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருட்டு
யாழ்ப்பாணம் மீசாலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த 13 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான கேபிள்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் அதே நிறுவனத்தில் தனியார் துறை பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணியாற்றியவர் என்பதுடன், மற்றைய நபர் திருடப்பட்ட பொருட்களைத் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 43 வயதுடைய நீர்வேலி மற்றும் கொட்டகலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.