கடுவெலயில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்; மூவர் கைது!
கடுவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 08 மைல்கல் பிரதேசத்தில் நிர்வாண நிலையில் நேற்று (02.08.2023) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, 36, 46 மற்றும் 47 வயதுடைய வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் கொதடுவ பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கு வழிவகுத்துள்ளதாகவும், முல்லேரிய பகுதியில் வைத்து இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, கடுவலை பகுதியில் முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடி மற்றும் கம்பி என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நடைப்பெற்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.