பதுளையில் தேன் எடுக்கச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!
தேன் எடுப்பதற்காக வனப்பகுதிக்கு சென்ற இளைஞர் ஒருவர், கற்பாறையில் இருந்து வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
பதுளை - மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதோவ கீழ்ப்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
தமது ஊரில் இருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் தேன் எடுப்பதற்காக இன்று (09.10.2023) மாலை மூவர் சென்றுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞர் கற்பாறை பகுதியில் இருந்த தேனில் கால் வைத்து வழுக்கி சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்துள்ளார். பின்னர் மீட்கப்பட்டு இளைஞர் முச்சக்கரவண்டியில் பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர்.
சடலம் பசறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.