02 கோடி பெறுமதியான சிலைகளைத் திருடிய தேரர்கள்!
மாவனெல்ல, தெவனகல ரஜமஹா விகாரைக்குச் சொந்தமான கரஹம்பிட்டிகொட, கெத்தாராம விகாரையில் வைக்கப்பட்டிருந்த 02 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான சிலைகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு தேரர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா ஹோட்டால் ஒன்றின் உரிமையாளர்
சம்பவத்தில் கம்பஹா தொம்பே பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும் 28 வயதுடைய தேரரும், கண்டி மஹய்யாவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பணிபுரியும் தேரரும், பேராதனை பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டால் ஒன்றின் உரிமையாளர் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொம்பே பிரதேசத்தில் உள்ள விகாரையில் பணிபுரியும் தேரரின் தலைமையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருட்டு சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.