அதிரடி நடவடிக்கையில் களமிறங்கிய பொலிஸார் ; போதைப்பொருளுடன் கைதான நபர்கள்
கொழும்பு - வெல்லம்பிட்டிய சிங்கபுர பிரதேசத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 28 சந்தேகநபர்கள் இன்றைய தினம் (26.11.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகரித்த குற்றங்கள் மற்றும் போதைப்பொருள்கள் தொடர்பிலான தேடுதல் வேட்டையில் 138 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 200 இராணுவப் பணியாளர்கள் ஈடுபட்டதன் காரணமாக இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், மேற்கு தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பன, மேற்கு தெற்கு குற்றப் பிரிவின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சோதனை நடவடிக்கை
இந்த நடவடிக்கையின் கீழ், 61 வீடுகள் மற்றும் 196 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்.
ஹெரோயின், ஐஸ், சட்டவிரோத போதைப்பொருள், வாள்கள், மன்ன, தடைசெய்யப்பட்ட கத்திகள் மற்றும் 12 கையடக்கத் தொலைபேசிகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையில் 28 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.