சவுதிக்கு பணிப்பெண்ணாக சென்ற இளம் குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
இலங்கையிலிருந்து மத்தியகிழக்கு நாடுகளுக்கு (பெரும்பாலும் சவுதி அரேபியா) பணிப்பெண்களாக செல்லும் அநேகமானோர் அதிகளவில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு நாடு திரும்புகின்றனர்.
தற்பொழுது அந்நிலை அதிகரித்துள்ளதுடன் கொலை சம்பவங்களும் அதிகளவில் பதிவாகி வருகின்றன.
அண்மையில் நுவரெலியா- லிந்துலைப் பிரதேசத்தில் தடுப்பூசிகள் உடலினுள் செலுத்தப்பட்ட நிலையில் நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில் கடந்த வருடம் வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதி அரேபியாவுக்கு சென்ற பெண்னொருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன்-டிக்கோயா,பகுதியை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இராஜேந்திரன் தினகேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வறுமை காரணமாக கடந்த வருடம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக இவர் சென்றுள்ளார். குறித்தப் பெண் 2023.04.05 ஆம் திகதி வரை அவர் தங்களுடன் தொலைப்பேசி ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார் .
அதன் பின்னர் அவருடனான தொலைபேசி அழைப்பு ஏற்படுத்த முடியாது போனதாகவும் அவரது அத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பயண முகவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது, கடந்த (08.05.2023)ஆம் திகதியே தினகேஸ்வரி இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
குறித்தப் பெண்ணின் இறப்பு தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு அமைச்சு, பயண முகவர், சவுதி தூதரகம் என அனைத்து இடங்களுக்கு சென்று வந்த போதும், இதுவரை தமக்கு தினகேஸ்வரியின் மரணம் தொடர்பாக எவ்வித தகவல்களும் அறியப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மருமகளின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 10 இலட்சம் ரூபாய் கேட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுற்றுலா விசா மூலமே இவர் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டதும் இவரின் கடவுச்சீட்டில் இவரின் அப்பாவின் பெயரான ராஜேந்திரன் என்பதற்கு பதிலாக தாத்தாவின் பெயரான சாமிநாதன் சேர்க்கப்பட்டு தினகேஸ்வரி சாமிநாதன் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தினகேஸ்வரி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே தமக்கு தெரியவந்ததாகவும் அவரின் அத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் குறித்த பெண்ணின் பிள்ளைகளை வளர்ப்பதற்கு எவ்வித உதவியும் தமக்கு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.